தென்மேற்கு பருவகாற்று வீசத்தொடங்கி விட்டாலே கேரளாவில் இருந்து வரும் சாரல் குற்றால அருவிகளில் நீராக பெருக்கெடுத்து ஓடி அனைவரது மனதையும் குளிரச் செய்கின்றன, அனைத்து வகையான சுற்றுலா பயணிகளையும் கவரும் ஒரு இடமாக குற்றாலம் திகழ்கின்றது. சீீசன் காலமான ஜீன் முதல் ஆகஸ்டு மாதம் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது, வெளிநாடுகளில் இருந்தும்,வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுக்கின்றனர். குற்றால மலைகளில் மூலிகைகள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றின் வழியாக ஓடிவரும் நீர் மருத்துவ குணம் வாய்ந்தது, இங்கு சீீசன் காலங்களில் பல்வேறு வகையான பழங்களான ரங்குஸ்தான், டொரியன், ஸ்டார் பழம், மங்குதான், ரம்டான், மலை நெல்லி, மலை சீத்தா போன்றவை கிடைக்கின்றன. இங்கு மொத்தம் எட்டு அருவிகள் உள்ளன. மெயினருவி (பேரருவி), சிற்றருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி, புலிியருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன.
மெயின் பால்ஸ் எனப்படும் பேரருவி அனைவரும் எளிதில் சென்று வரும் அருவியாக உள்ளது. இது குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு கார், பஸ்களில் செல்பவர்களுக்கு பார்க்கிங் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. பேரருவி 91 அடி உயரத்தில் இருந்து பாய்ந்த பொங்குமாங்கடலில் விழுந்து நிரம்பி வழிகிறது. இவ்வருவியை நாம் தென்காசி மாநகரிலிருந்தும் நாம் ரசிக்கலாம். இங்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிற்றருவி பேரருவியிலிருந்து சிறிது தூரம் நடந்தால் சிற்றருவிக்கான நுழைவு வாயிலை அடையலாம் இங்கு சிறிது தூரம் நடக்க வேண்டும் வயதானவர்கள் நடப்பதற்கு சிறிது சிரமாக இருக்கும், மற்ற அருவிகளில் நீர் விழாத நேரங்களில் சிற்றருவியில் மட்டும் எப்படியாவது தண்ணீர் விழும். இங்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறிய அறைகளாக இரண்டு அறைகள் உள்ளன. இவற்றில் உள்ளே சென்றால் சிற்றருவியில் குளித்து மகிழலாம்.
குற்றாலத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஐந்தருவி அமைந்துள்ளது. ஐந்து கிளைகளில் தண்ணீர் கொட்டுவதால் இதற்கு ஐந்தருவி என பெயர் பெற்றது. இங்கு ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து பிரிவுகளில் தண்ணீர் கொட்டுவதால் கூட்ட நெரிசல் இல்லாமல் குளிக்க முடிகிறது. இந்த அருவியின் அழகை இதன் அருகில் அமைந்திருக்கும் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து ரசிக்கலாம். வெள்ளியை உருக்கி விட்டது போல் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது.
பழத்தோட்ட அருவி ஐந்தருவிக்கும் சிற்றுருவிக்கும் இடையில் அமைந்துள்ளது.இது குற்றாலத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது. ஐந்தருவிக்கு செல்லும் தண்ணீரில் ஒரு பிரிவு பிரிந்து இந்த அருவிக்கு வருகிறது. இது அரசின் பழத்தோட்ட பண்னை வழியாக வருவதால் இப்பெயர் பெற்றது. முன்பு இதில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அனுமதி இல்லை. இதில் VIP க்கள் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
பழைய குற்றால அருவி பேரருவியில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவியில் விழும் நீர் படிகள் போன்ற அமைப்பில் விழுகிறது. அனைத்து சுற்றுலா பயணிகளும் குளிப்பதற்கு ஏற்ற இடமாக இந்த அருவி திகழ்கிறது. இவ்வருவியில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுள்ளது. இங்கு கார், பேருந்து நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புலிியருவி சிறுவர், சிறுமியர் குளித்து மகிழ புலியருவி உள்ளது இவ்வருவி பழைய குற்றாலம் அருவி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கும் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
செண்பகாதேவி அருவி சிற்றருவிக்கு போகும் பாதையில் மலையை நோக்கி 2 கி.மீ பயணம் செய்தால் செண்பகாதேவி அருவியை அடையலாம். இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. இங்கு குளிப்பதற்காக அருவி தடாகம் அமைந்துள்ளது. முன்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் ஆனால் தற்போது மலைப்பகுதியை பாதுகாப்பதற்காக இங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனருவி செண்பகாதேவி அருவியிலிருந்து 3 கி.மீ தூரம் காட்டுப்பகுதியில் பயணம் செய்தால் தேனருவியை அடையலாம். இப்பகுதி மிகவும் ஆபத்தான இடமாகும். இங்கு இரண்டு மலைகளுக்கு நடுவே தேனருவி தடாகத்தில் விழுந்து வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இவ்வருவி காட்சியளிக்கிறது. இதன் பாறைப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான தேன்கூடுகள் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. இவ்வருவியை அடைய பலமுறை நீரோடையை கடக்க வேண்டும். தற்போது இங்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலே கொஞ்சம் தூரம் சென்றால் பாலருவியை அடையலாம் இது கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது இவ்வருவிக்கு தென்மலை வழியாக சென்று கேரள வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வாகனம் மூலமாகவும் பாலருவியை அடையலாம்.
குற்றால அருவிகள் உலகளவில் சிறப்பு வாய்ந்தவை. இவ்வருவிகளில் விழும் சுத்தமான மருத்துவ குணம் நிறைந்த தண்ணீருக்காக சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். பலருடைய வாழ்நாள் ஆசையாக ஒரு முறையாவது குற்றால அருவிகளில் குளிக்க வேண்டும் என்பதே.
0 Comments