விலைவாசிக்கேற்ப சம்பளத்தை உயர்த்திட பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அதைப்போலவே தொகுப்பூதியப்பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியஉயர்வுகள் விலைவாசிஉயர்வுக்கேற்ப உயர்த்தி தருவதே நியாயமானது. இதனை துறைரீதியாக உடனடியாக அமுல்செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது. இதில் தினக்கூலிகள், தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர பணியாளர்கள், அரசின் திட்டவேலையில் பணிபுரிபவர்கள் என பாராபட்சம் காட்டக்கூடாது என தெரிவிக்கின்றனர். தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூபாய் 7700 தொகுப்பூதியமாக தரப்பட்டுவருகிறது. தொகுப்பூதியத்தை தவிர வேறெந்த சம்பள சலுகைகளும் இவர்களுக்கு கிடையாது. ஆனால் ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 14ஆயிரம் தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். இதனுடன் வருங்கால வைப்பு நிதி, 6 மாதம் மகப்பேறுகாலவிடுப்பு, இதர விடுப்பு சலுகைகளும் கிடைக்கின்றது. இதனால் தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவும், இதர சலுகைகளும் தர தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியஉயர்வு கேட்கும் போதெல்லாம் தமிழகஅரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதுவும் பகுதிநேர ஆசிரியர்கள் மத்திய அரசின் திட்டவேலையில் உள்ளவர்கள். மத்திய அரசு போதுமான நிதியை தருவதில்லை என தமிழகஅரசு கைவிரித்து வருகிறது. அரசின் இந்த பதில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கிவிட்டது.
மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் இந்த பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடுமாநில மாணவர்களுக்கு பாடத்திட்டங்களோடு சேர்ந்து கல்விஇணைச்செயல்பாடு பாடங்களையும் நடத்திடவே தமிழகஅரசு நியமித்தது. இவர்களுக்கான நிதிபங்களிப்பு மத்தியஅரசு 60 சதவீதம் மற்றும் மாநிலஅரசு 40 சதவீதம் என ஒப்புக்கொள்ளப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதனால் மத்தியஅரசு நிதி பங்கினை தருவதில்லை என்றாலும் நிதியை கேட்டு பெறவேண்டியது இந்த ஆசிரியர்களை நியமனம் செய்த மாநில அரசின் தலையாய கடமையாகும்.
ரூபாய் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஊதியஉயர்வு தரப்பட்டு தற்போது ரூபாய் 7700 தரப்படுகிறது. கடும்விலைவாசி உயர்வால் இந்த குறைந்த சம்பளத்தில் இந்த ஆசிரியர்கள் குடும்பங்களை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனுடன் இன்னும் இவர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத ஊதிய உயர்வு தரப்படாமல் உள்ளதால் மிகவும் கவலையுடன் உள்ளனர். ஊதியம் உயர்த்தி இப்போது 2 ஆண்டுகள் முடிந்தும் அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதாக தங்களின் கவலையை இந்த ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளி நெருங்கி வரும்வேளையில் இவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டால் மகிழ்ச்சி அடைவார்கள்.மேலும் 9 கல்விஆண்டுகளாக வேலைசெய்யும் இவர்களுக்கு பண்டிகை முன்பணம் தரவும் அரசு முன்வரவேண்டும். இதற்கான உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-தமிழக முதல்வரும், துணை முதல்வரும், பள்ளிக்கல்வி அமைச்சரும் ஒருங்கிணைந்து சம்பளஉயர்வை மனிதநேயத்துடன் அறிவித்து வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டுகிறோம் என்றார்.
0 Comments