இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் முதல் நாளான நேற்று 530 பேர் தேர்வாகினர். 2ம் நாளான இன்று மொத்தம் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, தீயணைப்புத்துறை ஆகிய பிரிவுகளுக்கான தேர்வு சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கி வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண் காவலர்களுக்கு நேற்று துவங்கி வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. பெண்களுக்கு 9 மற்றும் 11ம் தேதிகளில் நடக்கிறது. இதில் ஆண்கள் 2,473 பேருக்கும், பெண்களில் 1,251 பேருக்கும் என மொத்தம் 3,724 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் ஆண்களுக்கு 3 கட்டங்களாக நடக்கும் தேர்வில் முதல் நாளான நேற்று கலந்துகொள்வதற்காக 800 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
இதில் 718 பேர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு தகுதியில் உயரம், மார்பளவு அளவிடப்பட்டது. தொடர்ந்து 1,500 மீ. ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த 3 போட்டிகளிலும் 530 பேர் தேர்வாகினர். தொடர்ந்து 2ம் நாளான இன்று தேர்வில் பங்கேற்க 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் நாள் நடந்த தேர்வை மாநகர கமிஷனர் அமல்ராஜ், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் நேற்று நடந்த தேர்வில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments