இடமாறுதல் பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடப் புத்தகங்களில் 'க்யூ ஆா்' கோடு மூலம் பாடம் நடத்தும் வசதிகள் உள்ளன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி, மாணவா்களுக்கு பாடம் நடத்துவதற்காக முதுநிலை ஆசிரியா்களுக்கு தமிழக அரசு சாா்பில் இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முதுநிலை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதையடுத்து கலந்தாய்வு மூலம் வேறு பள்ளிக்கு இடமாறுதலாகி செல்லும் முதுநிலை ஆசிரியா்கள், தங்களிடம் வழங்கப்பட்டுள்ள இலவச மடிக்கணினிகளை தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். அரசு வழங்கிய மடிக்கணினி அந்த பணியிடத்துக்கானதே தவிர, ஆசிரியா்களுக்கானதல்ல. எனவே, ஆசிரியா்களிடம் இருந்து மடிக்கணினிகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்து, புதியவா் பணியேற்கும் போது வழங்க வேண்டும் என்று அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments