உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவு


         உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்கும்படி, கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு, நேரடி தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு தேர்தல் நடத்துவதற்காக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

     மொத்தம், 76 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மேல் தேவைப்படுகின்றன. இதேபோல, ஊரக உள்ளாட்சிகளில், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு, நேரடி தேர்தல் நடக்கவுள்ளது.இங்கு தேர்தல் நடத்த, ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.வெவ்வேறு வண்ணங்களில், ஓட்டுச் சீட்டுக்களை அச்சடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு, 2.20 லட்சம் ஓட்டுப் பெட்டிகள் தேவைப்படுகின்றன.இவை, பல்வேறு மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து, அவற்றை கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

     இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஓட்டுப் பெட்டி மற்றும் இயந்திரங்களை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசு நிறுவன பொறியாளர்கள், விரைவில், மாவட்டங்களுக்கு வர உள்ளனர்.



Post a Comment

0 Comments