பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, 'லேப்டாப்' கிடையாதா?

                    பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, 'லேப்டாப்' கிடையாதா?



        அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 2011 முதல், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.


     மாணவர்கள், பிளஸ் 2 வரையாவது படிக்க வேண்டும் என்ற நல்லஎண்ணத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தால் பலன் அடைந்த, பிளஸ் 2 மாணவர்கள், 18 வயது நிரம்பிய பின், புதிய வாக்காளரானதும், அவர்களின் ஆதரவும், ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. மேலும், 25 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள், 10ம் வகுப்பு முடித்து, தொழிற்கல்வியான, பாலிடெக்னிக்கில் சேர்ந்தனர். அவர்களுக்கும், லேப்டாப்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், லேப்டாப் வழங்கும் திட்டத்தில், திடீர் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.அதாவது, இந்த ஆண்டு பிளஸ் 1 படிப்பவர்களுக்கும், பிளஸ் 2 படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 படித்த மாணவர்களில், கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்,லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிளஸ் 2க்கு பின், தொடர்ந்துபடிக்காமல், வேலைக்கு சென்ற மாணவர்களுக்கு, லேப்டாப் மறுக்கப்பட்டுள்ளது.சில மாணவர்கள், ஏழ்மையிலும் படிப்பை தொடரும் வகையில், தொலைநிலை கல்வியில் சேர்ந்துள்ளனர்; அவர்களுக்கும், லேப்டாப் வழங்கப்படவில்லை.பிளஸ் 2 வரை படித்ததை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு பதில், அவர்களை காயப்படுத்தும் வகையில், பள்ளி கல்வி துறையும், தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையும், இம்முடிவை எடுத்துள்ளதாக, மாணவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.


பரிதாப மாணவர்கள்!



கடந்த, 2018 - 19ம் கல்வி ஆண்டில், பிளஸ் ௨ முடித்த மாணவர்கள் தான், மிகவும் சோதனைக்கு ஆளாகினர். இவர்கள், பிளஸ் 1 சேர்ந்த போது தான், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 'ப்ளூ பிரின்ட்' முறை நீக்கப்பட்டு, திடீரென சிக்கலான கேள்விகள் அடங்கிய வினாத்தாளுடன், பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு போதிய அவகாசமோ, பயிற்சியோ இல்லாததால், பல மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பு முடித்ததும், பிளஸ் 2 படிக்க முடியாமல், பாதியில் கைவிட்டனர். இதையடுத்து தான், பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண் முறையிலும், வினாத்தாள் முறையிலும், கடினமான அம்சங்கள் நீக்கப்பட்டன. இப்படி, பல சிக்கல்களைசந்தித்து,பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, இலவச லேப்டாப்வழங்குவதிலும் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments