உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்கப்பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தார். அதோடு, கடந்த 29ம் தேதி 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை, முதல்வர் எடப்பாடி சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கியும் வைத்தார். இதன்மூலம் 2.5 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்காக 2,363 கோடி நிதியும் தமிழக அரசு உடனடியாக ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகே 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றாலும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறினார்.
இதன்மூலம் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. பொதுமக்களும் தினசரி ரேஷன் கடைகளுக்கு வந்து எப்போது ரூ.1000 வழங்குவீர்கள் என்று கேட்டு வருகிறார்கள். அதேநேரம், வருகிற 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில், வருகிற (நாளை) முதல் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்கப்பணம் வழங்க கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 பணம் வழங்குவதை தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 பணம் வழங்க அனுமதியளித்துள்ளது. மேலும், தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 Comments