ஆசிரியர்கள் மீது பொய்யாக பாலியல் புகார் அளித்த இரண்டு மாணவர்கள் அதிரடி கைது

      சூலூர் பள்ளி முதல்வர், ஆசிரியைகள் மீது பாலியல் புகார் கூறிய வட மாநில மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அடுத்த சூலூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் பீகாரை சேர்ந்த அண்ணன், தம்பியான 2 பேர் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்கள் தங்களை பள்ளியின் முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோருடன் சென்று போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக சூலூர் போலீசார் பள்ளியின் முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

      இதனைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் நேற்று முன்தினம் மற்ற மாணவர்களும், ெபற்றோரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கோவை எம்.பி. நடராஜனும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், பள்ளியின் பொறுப்பு முதல்வர் நாகேந்திரன், சூலூர் போலீசில் அளித்த புகாரில் ‘‘2 மாணவர்களும் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். பெற்றோரின் தூண்டுதலின்பேரில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, ஆசிரியர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

   எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது். அதன்பேரில் 2 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 மாணவர்களும் கைது செய்யப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த 2 மாணவர்களின் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற எங்கள் மகன்கள் 2 பேரும் திரும்பி வரவில்லை. என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை என்றனர்.


Post a Comment

0 Comments