பாடத்திட்டமே இல்லாத இன்ஜினியரிங் பட்டதாரிகளால் எப்படி கல்வி கற்றுத்தர முடியும்

    ''பி.இ., முடித்தோருக்கு பள்ளியில் கணித ஆசிரியர் என்ற அரசின் உத்தரவால், பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது,'' என இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில், 'டெட்' தேர்வு எழுதி ஆசிரியர் வேலைக்காக 35 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

      இந்நிலையில் பி.இ., முடித்தவர்கள் பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கலாம் என்ற அரசு அறிவிப்பு வேடிக்கை. ஆண்டுக்கு பி.இ., முடித்து 1 லட்சம், பி.எட்., முடித்து 4 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். இளங்கலை, முதுநிலை அறிவியல், கலை பட்ட படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், பொருளியல், மொழி பாடம் படித்தவர்கள், பி.எட்., முடித்தால் தான் ஆசிரியர் ஆக முடியும். பாடத்திட்டமே இல்லாத இன்ஜினியரிங் பட்டதாரிகளால் எப்படி கல்வி கற்றுத்தர முடியும்.

    இதனால் அவர்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பி.இ., முடித்து, பி.எட்., படிக்கலாம் என்ற அரசின் அனுமதிக்கு 3ஆண்டுக்கு முன்பே ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரசு பள்ளியில் ஏற்கனவே 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை உபரியாக வைத்துள்ளனர். அதே போன்று இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரிகளாக தரம் உயர்த்த கல்வித்துறை முன்வரவில்லை.இச்சூழலில் பி.இ., முடித்தவர்களை பள்ளியில் கணக்கு பாடம் எடுக்க நியமிக்கலாம் என்ற உத்தரவு ஏற்புடையதல்ல. அவரவர் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும், என்றார்.


Post a Comment

0 Comments