கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்தவிதமான திட்டமும் அரசிடம் இல்லை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

     கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதில் அளித்துள்ளார். மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் குறித்தும், அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்றும் மக்களவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:


        ''பொதுத்துறை வங்கிகள் அளித்த புள்ளிவிவரங்களின் படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் 2019, மார்ச் மாதம் வரை மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்விக் கடன் நிலுவை ரூ.67 ஆயிரத்து 685.59 கோடியாக இருந்தது. இது 2019, செப்டம்பர் மாதம் வரை ரூ.75 ஆயிரத்து 450.68 கோடியாக அதிகரித்துள்ளது. கல்விக் கடனை விரைவாகச் செலுத்தக் கூறி மாணவர்களுக்கு வங்கிகள் தரப்பில் எந்த விதமான நெருக்கடியும் அளிக்கப்படவில்லை, அவ்வாறு வங்கிகள் நெருக்கடியால் மாணவர்கள் கல்விக் கடனைச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக எந்தவிதமான தகவலும் இல்லை. கல்விக் கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் மாணவர்களிடம் எந்தவிதமான கடுமையான நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. அதேபோல, மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்தவிதமான திட்டமும் அரசிடம் இல்லை. அதுகுறித்து மத்திய அரசு ஆலோசிக்கவும் இல்லை’’. இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments