தேர்தல் இல்லாத, 10 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு, விடுமுறை நீட்டிக்கப்பட்டது, பெற்றோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு, டிசம்பர், 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது; ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்கிறது. இந்த பணிகளில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக, புத்தாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் தேதி, 4ம் தேதிக்கு மாற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக, இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த விஷயத்தில், பள்ளிக் கல்வித் துறை தவறான முடிவு எடுத்துள்ளதாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய, ஒன்பது மாவட்டங்களிலும், சென்னையிலும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரி யர்களுக்கு, தேர்தல் பணி ஒதுக்கப்படவில்லை.
ஆனால், மற்ற மாவட்டங்களுடன் சேர்த்து, தேர்தல் நடக்காத மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தது, தேவையற்றது என, பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள், தேர்தல் பணிக்கு செல்லாத நிலையில், அந்த பள்ளிகளுக்கும், கூடுதல் விடுமுறை அறிவித்து, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டார். இதுவும், பெற்றோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:தேர்தலுக்கு தொடர்பில்லாத மாவட்டங்களிலும், தேர்தல் பணியில் ஈடுபடாத, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கும், விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு பாடங்களை, உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களை விட, தமிழக பள்ளி கல்வி திட்ட மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று, உயர் கல்வியில் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்புள்ள நிலையில், இதுபோன்ற தவறான விடுமுறைகள், மாணவர்களை பெரிதும் பாதிக்கின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments