அறிவிப்பு வெளியாகி 5 மாதங்களாகியும் 5, 8-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியாகவில்லை- ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடிப்பு
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இதுவரை மாதிரி வினாத்தாள் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே குழப்பம் நிலவிவருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்புகல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெறஉள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகி 5 மாதங்களாகியும் மாதிரி வினாத்தாள், வினா வடிவம் வெளியிடப்படாததால் மாணவர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு முப்பருவ பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் 3 பருவத்துக்குரிய புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டும். இதுவே குழந்தைகளுக்கு பெரும் பாரமாகிவிட்டது. முதல்முறையாக பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் மாணவர்கள் இடையே அச்சமும் நிலவுகிறது. மறுபுறம் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பழைய முப்பருவத்தேர்வில் வினாத்தாள்கள் மாவட்டவாரியாக தயாரித்து வழங்கப்பட்டன. தற்போது பொதுத்தேர்வு வினாத்தாளை தேர்வுத் துறை வடிவமைத்து வழங்கும் என்பதால் எதை முன்மாதிரியாக வைத்து மாணவர்களை தேர்வுக்கு தயார்செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது. பொதுத்தேர்வுக்கு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 2-ம் பருவத்தேர்வும், வழக்கமானதாக இருந்துவிட்டது. இன்னும் 2 மாதமே அவகாசமுள்ளதால், இளம் குழந்தைகளை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவது சிரமமாகும்.
வினாத்தாள் கட்டமைப்பு தெரிந்தால் மட்டுமே அதற்கேற்ப மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த முடியும். அதனால் மாதிரி வினாத்தாளை அரசு உடனே வெளியிட வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘5, 8-ம் வகுப்புகளுக்கு அமலாகியுள்ள புதிய பாடத்திட்டம் கடினமாக உள்ளதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதில் பொதுத்தேர்வு அறிவிப்பு கூடுதல் சுமையாகிவிட்டது. அரசுதாமதமாக அறிவித்தால் பெரும்பாலான மாணவர்களிடம் முதல்பருவ பாடப்புத்தகங்கள் இல்லை. இதனால் புத்தகங்களை நகல் எடுத்து மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது. மேலும், 5-ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு குறித்த விளக்கமும் தெளிவாக இல்லை. இதுதவிர பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவம் தெரியாததால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தடுமாற வேண்டியுள்ளது. எனவே, கல்வித் துறை மாதிரி வினாத்தாளை உடனே வெளியிடுவதுடன், இந்த ஆண்டு மட்டும் பொதுத்தேர்வில் முதல்பருவ பாடங்களைத் தவிர்க்கலாம்’’ என்றார்.
இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நடப்பு கல்வி ஆண்டில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை 17 லட்சம் பேர் வரை எழுதவுள்ளனர். தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் தயாரிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.பணிகளை முடித்து விரைவில் மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும்’’ என்றனர். பொதுத்தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கேள்விகள் ஒரு மதிப்பெண் வினாக்களாக கேட்கப்படுமா அல்லது வேறு வடிவில் கேட்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் தாங்களே தயாரித்த மாதிரி வினாக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சரியான வினாத்தாள் வடிவம் எதுவெனத் தெரியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில், மேல்நிலை வகுப்புகளுக்கு வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை போன்று 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments