வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், வாரவிடுமுறை என்று நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏடிஎம் சேவையும் கடுமையாக பாதிக்கப்படும். 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் கடந்த 27ம் தேதி மத்திய அரசு நடத்திய கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து 2 நாட்கள் ஸ்டிரைக் திட்டமிட்டப்படி தொடங்கும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி நாளை முதல் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.
இந்த போராட்டத்தில் 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர். பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை வேறு. இதனால் தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இன்றே வங்கிகளில் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள்தான் பணத்தை நிரப்புவது வழக்கம். வங்கிகள் ஒருநாள் மூடினாலே ஏடிஎம்களில் மதியத்துக்கு மேல் பணம் இல்லாத நிலை தான் உள்ளது. தற்போது வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசு மற்றும் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் 31ம் தேதி சம்பளம் வழங்கப்படும். இவர்களுக்கு வங்கிகள் மூலம்தான் மாத சம்பளம் பரிவர்த்தனை நடக்கிறது. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் இவர்களுக்கு 31ம் தேதி சம்பளம் பணம் கிடைக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு சென்னை: இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வங்கி ஊழியா்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
அகில இந்திய அளவில் 10 லட்சம் வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; வங்கிகள் வாரத்துக்கு 5 நாள்கள் செயல்பட வேண்டும்;அடிப்படை ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளை இணைக்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஓய்வூதியத்தைப் புதுப்பிக்க வேண்டும்; குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும்; ஓய்வூதிய பலன்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும்; அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஒரே மாதிரியான வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும்; விடுப்பு வங்கியை அறிமுகப்படுத்த வேண்டும்; ஒப்பந்த ஊழியா்களுக்கு சமமான வேலைக்காக சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படவில்லை எனில், வரும் மாா்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும்.
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமரச பேச்சுவாா்த்தையில், மத்திய தலைமை தொழிலாளா்கள் ஆணையா், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு உறுப்பினா்கள் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில், எங்கள் கோரிக்கை தொடா்பாக எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, திட்டமிட்டப்படி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளாா். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் அகில இந்திய அளவில் 10 லட்சம் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் போராட்டம் காரணமாக, பணம், காசோலை பரிவா்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்
0 Comments