போகி நாளில் உள்ளூர் விடுமுறை: தலைமை ஆசிரியர்களிடம் முடிவு எடுக்கும் அதிகாரம்

     பொங்கல் பண்டிகையை அடுத்து பள்ளிகளுக்கு 15ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் போகி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளுக்கு 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்ல விரும்பும் பணியாளர்கள், ஆசிரியர்கள் கடந்த 11ம் தேதியே வெளியூர் செல்லத் தொடங்கிவிட்டனர்.

      பெரும்பாலான தனியார் கல்லூரிகள், பள்ளிகள் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை அறிவித்து விட்டதால் தனியார் பள்ளிகள் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், படிக்கும் மாணவ மாணவியர் 11ம் தேதி மாலையே வெளியூர் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் அரசுப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

     14ம் தேதி போகி என்பதால் அந்த நாளில் விடுமுறை அறிவித்தால் வெளியூர் செல்ல வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான அறிவிப்பை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவித்துக் கொள்ளலாம் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், அதை சமன் செய்யும் வகையில் வேறு ஒரு தேதியில் பள்ளியை நடத்த வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments