‘நீட்’ தேர்வு - தமிழக அரசின் அலட்சியம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

‘நீட்’ தேர்வு - தமிழக அரசின் அலட்சியம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!



    ‘நீட்’ நுழைவு தேர்வை எழுத பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு தமிழக அரசு மாணவர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தாததுதான் காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர கடந்த 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர்.



     2020 ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். அதன்படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் மட்டும் தேசிய அளவில் 74 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக வந்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களை இந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு 17 சதவீதம் பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த ஆண்டு தமிழகத்தில் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.



    ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் ‘கட்ஆப் மதிப்பெண்’ ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தமிழக மாணவர்களால் அந்த கட் ஆப் அளவை எட்டிப் பிடிக்கமுடியவில்லை. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் தேசிய அளவில் தயாரிக்கப்படும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்பது தான் காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி இடம் கிடைக்காதவர்கள் மீண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளில் போட்டி போடுவதாலும் தமிழக மாணவர்களால் மருத்துவ படிப்புக்கான இடங்களை பெற முடியவில்லை என்பதுதான் பிரதான காரணமாக இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 80 முதல் 100 வரை கட்ஆப் உயர்ந்து போனதால் பெரும்பாலான மாணவர்கள் ஊக்கம் குறைந்து போனார்கள், இது போன்ற காரணங்களால் மருத்துவ படிப்பை விட்டு வேறு படிப்புகளுக்கு சென்றுவிட்டனர்.



   இது தவிர கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டு பல்வேறு குளறுபடிகளால் நீட் பயிற்சி வகுப்பு தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போது பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அந்த தேர்வில் கவனம் செலுத்தி வருவதால், நீட் ேதர்வுக்கு பயிற்சி எடுக்க முடியாமல் தவிக்கும் நிலையும் நீடிக்கிறது. மேலும் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்த பிறகு குறைந்த கால அளவில் அவர்கள் நீட் பயிற்சி எடுத்தாலும் அது பயன் தராது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில்தான் சேர முடியும். அதற்கு பல லட்சம் கட்டணம் செலுத்தித்தான் சேர முடியும். இது போன்ற காரணங்கள் தமிழக மாணவர்களை சோர்வடைய வைத்துள்ளது. அதனால் இந்த ஆண்டு 17 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வில்லை என்பது வருத்தமான வேதனை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் மூலம் ஏழை எளிய பிரிவு மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்வது வருங்காலத்தில் கனவாகவே இருக்கும்.


Post a Comment

0 Comments