உலக அளவில் அஞ்சல் சேவை மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் யார் ?

   உலக அளவில் அஞ்சல் சேவை மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைத்த ஹென்றிச் வான் ஸ்டீபன் பிறந்த தினம் - சனவரி 7: பிரஷ்யாவில் பிறந்தவர். பள்ளியில் சேரும் முன்பே இத்தாலி, ஸ்பெயின், ஆங்கில மொழிகளைக் கற்றவர்.

    16-வது வயதில் அஞ்சல் சேவைப் பணியாளராகச் சேர்ந்தார். அப்போது ஜெர்மனி 17 பகுதிகளாகப் பிரிந்திருந்தது. அஞ்சல் சேவை தனித்தனி விதிகளுடன் செயல் பட்டது. கட்டணங்களும் வெவ்வேறாக இருந்தன. வேலை பார்த்துக்கொண்டே கல்வியைத் தொடர்ந்தார். அதிக கல்வியறிவும், அபார மொழித் திறனும் அடுத் தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்றுத் தந்தன. நாடக விமர்சனங்களும் எழுதிவந்தார். ‘ஹிஸ்டரி ஆஃப் த பிரஷ்யன் போஸ்ட் ஆபீஸ்’ என்பது உட்பட அஞ்சல் துறை தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    தனியாரால் நடத்தப்பட்டு வந்த அஞ்சல் சேவையை அரசுடமை ஆக்கும் திட்டத்துக்கு 1866-ல் பொறுப்பேற் றார். முதலில், தபால்கள் அனுப்பும் நடைமுறையை எளிதாக்க ஜெர்மனி முழுவதும் ஒரே கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்தினார்.அஞ்சல் சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும், உலகம் முழுவதும் அதை முறைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டார். ஜெர்மனியில் தபால் அட்டையை அறிமுகப்படுத்தவேண்டும் என்று 1865-ல் தீர்மானித்தார். 1870-ல் இவர் அஞ்சல் சேவைகள் இயக்குநராகப் பதவியேற்ற பிறகு, அந்த நோக்கம் நிறைவேறியது.

      ஜெர்மனியில் அஞ்சல், தொலைபேசி சேவைகளை ஒன்றிணைத்தார். அதன் பிறகு நடந்த பிரான்ஸ் - பிரஷ்யப் போரில் படைப் பிரிவினரிடையே தகவல் தொடர்புக்கு அஞ்சல் அட்டைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. சிறு தாமதம், இடையூறுகூட இல்லாமல், போர் வீரர்களின் கடிதப் பரிமாற்றம் நடந்தது. 8 மாத காலகட்டத்தில் சுமார் 9 கோடி கடிதங்கள், 25 லட்சம் அஞ்சல் அட்டைகள் பட்டுவாடா செய்யப்பட்டன.

        அதன் பிறகு பார்சல்கள், மணி ஆர்டரையும் அறிமுகப் படுத்தினார். இதை பின்பற்றி, 1883-ல் ஜெர்மனி யில் மட்டும் 8 கோடி பார்சல்கள் அனுப்பப்பட்டன. அப்போது உலகம் முழுவதும் மற்ற நாடுகளில் மொத்தமே 5 கோடி பார்சல்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. 1876-ல் பிரஷ்யப் பேரரசின் அஞ்சல் துறைத் தலைவர், 1880-ல் அஞ்சல் சேவைகளுக்குப் பொறுப்பான அரசு செயலர், 1895-ல் ஜெர்மனி அஞ்சல் சேவைகள் துறை அமைச்சர் என உயர்ந்தார். 1874-ல் பெர்ன் நகரில் நடந்த சர்வதேச அஞ்சல் மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார். அதில்தான் சர்வதேச போஸ்டல் யூனியன் தொடங்கப்பட்டது.

    ஜெர்மனியில் தொலைபேசியை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவை துறைகளில் தூய ஜெர்மன் மொழிக் கலைச் சொற்களை உருவாக்குவதிலும் முனைப்பாகச் செயல்பட்டார். உலகம் முழுவதும் அஞ்சல் சேவை சீரமைப்பில் முக்கியப் பங்காற்றிய ஹென்றிச் வான் ஸ்டீபன் 66-வது வயதில் மறைந்தார்.


Post a Comment

0 Comments