‘‘பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சரிவதை தவிர்க்க, கணித, அறிவியல் பாடத்துக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்’’ என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பள்ளிக் கல்வியின் பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதற்கிடையில் நடப்பாண்டு 10-ம் வகுப்புக்கு அமல்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் திட்டத்துக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், பாடங்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கணித, அறிவியல் பாடத்தின் வினாத்தாள் முறையில் மாற்றம் செய்து அகமதிப்பீடு வழங்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கணித பாட ஆசிரியர்கள் எஸ்.ருக்மணி, ஆர்.செல்லையா ஆகியோர் கூறியதாவது:
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு கணித தேர்வில் தேர்ச்சி பெற செய்முறை வடிவியல், வரைபடம் கேள்விப் பகுதி உதவியாக இருந்தது. ஆனால், புதிய வினாத்தாள் அமைப்பில் வரைபடத்துக்கும், செய்முறை வடிவியலுக்கும் தலா 8 மதிப்பெண் மட்டுமே தரப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு, முன்பு வழங்கியதுபோல தலா 10 மதிப்பெண் வழங்க வேண்டும். இதுதவிர வினாத்தாளில் ‘ஈ’ பிரிவில் இடம்பெறும் வாய்ப்பு வினாக்களையும் செய்முறை வடிவியல் மற்றும் வரைபட பகுதிகளில் இருந்தே கேட்க வேண்டும்.
பிற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அதிக பாடங்கள் உள்ளதால் கணிதத்தில் தேர்ச்சி குறையக்கூடும். அதனால் பாடச்சுமையை குறைப்பதுடன், அறிவியல் அல்லாத இதர பாடங்களுக்கும் அகமதிப்பீடாக 10 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அறிவியல் ஆசிரியர் கே.செல்வராஜ் கூறியதாவது:
அறிவியல் பாடத்தேர்வு மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தேர்ச்சி பெற 20 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பழைய வினாத்தாள் முறையில் 1 மற்றும் 2 மதிப்பெண் கேள்விகள் தலா 15 வீதம் 30 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் இவற்றை படித்தாலே தேர்ச்சி பெறும் நிலை இருந்தது. ஆனால், புதிய வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 12 கேள்விகளும், 2 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும் மட்டுமே கேட்கப்படுகின்றன.
புதிதாக 4 மற்றும் 7 மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியல் பாடத்திட்டத்தில் மொத்தம் 21 பாடங்கள் உள்ளன. ப்ளு பிரின்ட் இல்லாததால் அதை முழுமையாக படிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இத்தகைய கடினமான வினாத்தாள் வடிவமைப்பால் தேர்ச்சி பாதிக்கக்கூடும். எனவே, மாணவர்கள் நலன் கருதி 4-க்கு பதிலாக 3 மதிப்பெண்களுக்கும், 7-க்கு பதிலாக 5 மதிப்பெண்களுக்கும் வினாத்தாள் அமைக்க வேண்டும். அதிகபட்சமாக 2 மதிப்பெண் பிரிவில் 15 கேள்விகள் கேட்கப்பட்டால் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவார்கள். இவ்வாறு அறிவியல் ஆசிரியர் கே.செல்வராஜ் கூறினார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறும்போது, ‘‘அடிப்படை கல்வித்தகுதியான பத்தாம் வகுப்புக்கு சாதாரண தகுதித்தேர்வை நடத்தினால் போதும். அதற்கு மாறாக நீட் தேர்வு போல வினாத்தாள் அமைப்பதால் மாணவர்களிடம் தேர்வு குறித்த பயம் எழுந்துள்ளது.
0 Comments