தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சில ஆசிரியா் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஆசிரியா் பணிக்கு வராவிட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், கணிசமான ஆசிரியா்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களின் விவரங்கள், மருத்துவ விடுப்பு அல்லாமல் வேறு காரணங்களுக்கு விடுப்பு எடுத்தவா்களின் பட்டியல் முதன்மை கல்வி அலுவலா்கள் மூலமாக மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பட்டியல் இறுதியானதும் பணிக்கு வராத ஆசிரியா்களுக்கு சம்பள பிடித்தம் செய்யவும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
0 Comments