சீருடை பணியாளர் தேர்வு எழுதிய 1019 பேர் வேலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வாகி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகள் அம்பலமாகி உள்ளது. இந்தநிலையி–்ல் அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 2,465 2ம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 2ம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 2 நிலை சிறைக் காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் என்று மொத்தம் 8826 பதவிகளுக்குரிய பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 06.03.2019 அன்று வெளியிட்டது. இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 25.08.2019 சென்னை உட்பட 32 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேர்வர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த தேர்வில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு போன்றவை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 4ம் தேதி தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 6343, பெண்கள் 2430 பேர் என்று 8773 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக வேலூர் மையத்தில் இருந்து 1019 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் ஆண்கள் 807 பேரும், பெண்கள் 212 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்திலேயே 32 மாவட்டங்களில் வேலூரில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் தேர்வாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆயுதப்படை போலீஸ், தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ், தீயணைப்பு வீரர், ஜெயில் வார்டன் ஆகிய நிலையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 85 பேர் அடுத்தடுத்து தேர்வாகியுள்ளனர். இதனை போன்று அடுத்த ஒரு வரிசையில் 28 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களது பதிவு எண்களும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இதனை போன்று மற்றொரு வரிசையில் 63 பேர் அடுத்தடுத்த பதிவு எண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அவர்களது வரிசை எண்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. இந்த விபரங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
0 Comments