பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி; ரூ.2,500 ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு

      திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் விருந்தினராகக் கலந்துகொண்ட உ.பி. முதல்வர், ''இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், மாணவர்கள் எளிதாகப் பயிற்சி பெற முடியும்.

      இதில் 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை மாணவர்கள் பயிற்சி பெறலாம். அவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதாமாதம் ரூ.2,500 வழங்கப்படும். இதில் ரூ.1,500 மத்திய அரசால் வழங்கப்படும். 1000 ரூபாயை மாநில அரசு வழங்கும். பயிற்சியின் முடிவில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அரசே உதவும். இதற்கென தனி மனிதவள மேம்பாட்டு மையம் உருவாக்கப்படும். அதேபோல மாநிலக் காவல்துறையில் கட்டாயம் 20 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தாலுக்காவிலும் ஐடிஐ மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


Post a Comment

0 Comments