5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வா, மூன்றாம் பருவத் தேர்வா? ஆசிரியர்கள் குழப்பம்

    ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மூன்றாம் பருவ தேர்வும் நடத்தப்படுமா எனத் தெரியாமல், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

   'மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, புதிய பாட திட்டம், பாட புத்தகங்களை தாமதமாக வழங்குவது, உரிய நேரத்தில் பாடங்களை முடிக்காதது போன்றவற்றால் தவிக்கும் மாணவர்களுக்கு, பொது தேர்வு, புதிய சுமையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், பொதுத் தேர்வுக்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மூன்றாம் பருவ தேர்வுகள் நடக்குமா என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

     பொதுத் தேர்வு மட்டும் நடத்தப்படுமா அல்லது மூன்றாம் பருவ தேர்வு நடக்குமா அல்லது மூன்றாம் பருவ தேர்வும், பின் பொதுத் தேர்வும் நடக்குமா என, பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனரகம் சரியான விளக்கம் அளிக்காததால், ஆசிரியர்களும் அடுத்த கட்ட பயிற்சி அளிப்பது குறித்து, முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.


Post a Comment

0 Comments