வேலூர்: அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2019-2020ம் ஆண்டு தெடக்கநிலை, இடைநிலை வாயிலாக அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார்மன்றம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் வளர்ச்சியிலும், சமுதாய மேம்பாட்டிலும், சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது முக்கியமானதாகிறது. மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான மற்றும் பசுமையான சூழலை உருவாக்குவது இந்த மன்றத்தின் நோக்கமாகும். அதற்காக அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24,250 தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு 5,000 வீதம், 1,212.5 லட்சமும், 7,043 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா 15,000 வீதம், 1,056.45 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,065 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, தலா 25,000 வீதம் 1,516.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments