தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்காக மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிதாக சேர்ந்த பேராசிரியர்களுக்கே மாதத்திற்கு ரூ 30 ஆயிரம் ஊதியமாக பெறப்படுகிறது.
கல்வி கட்டணம் குறித்து மாநில அரசுகளுக்கு தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. அதில் 6ஆவது மற்றும் 7ஆவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை மாநில கட்டண ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழுவின் பரிந்துரையின்படி பொறியியல் கல்லூரிகள் எங்கிருந்தாலும் சரி அதில் ஆண்டு கட்டணமாக ரூ 1.44 லட்சம் முதல் 1.58 லட்சம் வரை அதிகபட்ச கட்டணமாகும். ஆனால் குறைந்தபட்ச கல்விக் கட்டணம் குறித்து அந்த ஆணையம் எதையும் பரிந்துரைக்கவில்லை. தமிழகத்தில் அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ 55 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அது போல் தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு கல்விக் கட்டணம் ரூ 90 ஆயிரம் ஆகும்.
கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை ஏற்றாவிட்டால் பேராசிரியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 50 சதவீதம் கல்விக் கட்டணத்தை உயர்த்தப்படும் என தெரிகிறது.
0 Comments