மாணவர் விடுதிகளிலும் வருகிறது பயோ மெட்ரிக் வருகை பதிவு.
"தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட 1480 பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு விரைவில் அமல்படுத்தப்படும்," என அத்துறை இயக்குனர் காமராஜ் தெரிவித்தார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
இத்துறையில் 1480 விடுதிகளில் 85 ஆயிரம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். 1000க்கும் மேற்பட்ட சமையலர், வாட்ச்மேன் பணியிடங்கள்காலியாக உள்ளன. திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இப்பணியிடங்களை நிரப்ப பிப்.,11, 12, 13ல் நேர்காணல் நடக்கிறது.இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு விவரம் கேட்கப்பட்டுள்ளது.பிற மாவட்டங்களில் ஏப்ரலுக்குள் காலியிடங்கள் நிரப்பப்படும். 300 காப்பாளர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படவுள்ளது. மாணவர் வருகை, விடுதி காப்பாளர்களை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படவுள்ளது.
600 மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.அனைத்து விடுதிகளிலும் மாணவர்களுக்கு, இரும்பு கட்டில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளன. மலை பகுதியில் மரக்கட்டில் வழங்கப்படும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்க ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவருக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவர் 'இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, எழிலகம், சென்னை' என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். கல்லுாரி மூன்றாமாண்டு மாணவருக்கு ஆண்டு தோறும் முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ,என்றார்.
0 Comments