கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, நோட்ஸ் ஆப் லெசன் எழுதுவது இல்லை.அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பிய முதல்வர்


அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர்? சொந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டம் இன்று புதுச்சேரியில் நடந்தது.அரசுப் பள்ளி ஆசிரியர்கள், துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


இதன் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசுகையில், ''பட்ஜெட்டில் 8 சதவீத நிதி கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. அதேசமயம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எங்கே உள்ளனர்? இதை யார் சரி செய்ய வேண்டும். அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர். யாரையும் குறை கூறவில்லை. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை தரமான கல்வி தர வேண்டும். புத்தகத்துக்கு மாற்றாக ஐபேடைப் பயன்படுத்தும் நிலைக்கு உலகமே மாறி வருகிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் ஐபேடைத்தான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். புதுச்சேரி மாணவர்களுக்கும் ஐபேட் தரத் தயாராக உள்ளோம்.

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, "நோட்ஸ் ஆப் லெசன்" எழுதுவது இல்லை. சொந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததால்தான் எம்.பி.ஆன பின்னர் எம்.எல். பட்டம் நான் பெற்றுள்ளேன். ஊக்குவித்தால் மாணவர்கள் படிப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.


அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், "பொறியியல் உள்பட பல உயர் படிப்புகள் படித்து மதிப்பெண் பெற்றாலும் திறன் போதிய அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பாடத்திட்டத்தைத் தாண்டி சிந்திக்க வைக்கும் பொறுப்பு ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் உண்டு. தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றால் கவனச் சிதறல் வீடுகளில் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு பெற்றோரே முக்கியக் காரணம். கல்வியுடன் மனத் துணிவு குழந்தைகளுக்கு அவசியம். காலத்துக்கு ஏற்ற தகுதியுடன் குழந்தைகளை உருவாக்குவது அவசியம்" என்று குறிப்பிட்டார்.

கல்வித்துறை செயலர் அன்பரசு பேசுகையில், "அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடின உழைப்பே இதற்குக் காரணம். கல்வி தரச்சான்று சதவீதமும் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்துக்கு 687 புள்ளிகள் இருந்தோம். தற்போது வந்த சான்றில் ஆயிரத்துக்கு 785 பெற்றுள்ளோம். மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கல்வியை கணக்கிட முடியாது. குழந்தைகளை முழுமையானவர்களாக உருவாக்குவதே கல்வி. வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புது முயற்சி எடுக்க உள்ளோம். மாதிரிப் பள்ளிகளை உருவாக்க உள்ளோம்" என்றார்.


Post a Comment

0 Comments