தமிழகத்தில் 144 தடை உத்தரவால் எதெல்லாம் இயங்கும்? எதெல்லாம் இயங்காது? முதல்வர் பேரவை செய்தி குறிப்பு
இந்த உத்தரவின்படி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன :
1 . அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து , தனியார் போக்குவரத்து , மகிழுந்துகள் , ஆட்டோ , டாக்ஸி போன்றவை இயங்காது . மாநிலங்களுக்கு இடையேயும் , மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது .
2 . அத்தியாவசியப் பொருட்களுக்கான , பால் , காய்கறி , மளிகை , இறைச்சி , மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும் , வணிக வளாகங்களும் , பணிமனைகளும் இயங்காது .
3 . அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது . அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம் , காவல் துறை , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை , சிறைத்துறை , பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை , நீதிமன்றங்கள் , உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும் . எனினும் , தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும் .
4 . தனியார் நிறுவனங்கள் , தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் . எனினும் , அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் .
5 . அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது .
6 . அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது . எனினும் , இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது .
7 . வீடுகளில் இல்லாமல் , விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி , பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் . அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் . வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு , நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ , அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு , நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் , அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
இதுபோன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் , மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் .
வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்நோய் தொற்றின் கடுமையை உணர்ந்து நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு , இந்த நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
தடை உத்தரவால் , கர்ப்பிணிப் பெண்கள் , முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து , அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள் , மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும் , விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை .
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி மாண்புமிகு அம்மாவின் அரசு பரிசீலித்து வருகிறது . இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் . கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க இந்த அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .
0 Comments