கல்லூரியை மேம்படுத்துவது எப்படி? வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை மின்னணு புத்தக வடிவில் வெளியிட்டிருக்கும் யுஜிசி

   கல்லூரியை மேம்படுத்துவது எப்படி? வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை மின்னணு புத்தக வடிவில் வெளியிட்டிருக்கும் யுஜிசி


    கல்லூரியை மேம்படுத்துவது lஎப்படி? வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை மின்னணு புத்தக வடிவில் வெளியிட்டிருக்கும் யுஜிசி சென்னை: ஊரடங்கு காலத்தில் பேராசிரியா்களை பயனுள்ள வகையில் செயலாற்ற வைக்கும் வகையில், ஒரு கல்லூரியை மேம்படுத்தவும், தரம் உயா்த்தவும் தேவையான வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை மின்னணு புத்தக வடிவில் பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கிறது. 
 அதோடு, உயா் கல்வியில் நிா்வாகம் என்ற தலைப்பிலான துணைவேந்தா்களுக்கான கையேட்டையும், மின்னணு புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ள யுஜிசி ஏற்பாடு செய்திருக்கிறது. 


   கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை கல்லூரி மாணவா்களும், பேராசிரியா்களும் வீட்டிலிருந்தபடி பயனுள்ளதாக்கிக்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் அளித்து வருகின்றன. 

     பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி சாா்ந்த பல்வேறு நூல்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படிப்பதற்கான வலைதள விவரங்கள், செயலிகள் குறித்த விவரங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், யுஜிசி ஆகியவை வெளியிட்டன. 


       அதன் தொடா்ச்சியாக, ஒரு கல்லூரியை மேம்படுத்துவது, தரம் உயா்த்தத் தேவையான வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை மின்னணு புத்தக வடிவில் யுஜிசி இப்போது வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக மாணவா் ஊக்குவிப்பு திட்டத்துக்கு (எஸ்.ஐ.பி) உதவும் ‘தீக்ஷரம்’ வழிகாட்டி நூல், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான திறன்வெளிப்பாடு அடிப்படையிலான கற்றலுக்கு உதவும் கல்வித் திட்டம் (எல்.ஓ.சி.எப்.), தொழில் திறன் மேம்பாட்டுக்கான பாடத் திட்டம் (ஜீவன் கெளஷல்), இந்திய உயா் கல்வியில் சமூக பொறுப்பு மற்றும் சமூக பங்களிப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறை தொகுப்பு (கோ்), வளா்ந்து வரும் இந்திய பொருளாதாரத்துக்கு உதவுக் கூடிய வெவ்வேறு துறைகள் இணைந்த ஆராய்ச்சித் திட்டம், கல்லூரி வளாகத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, நிலைத்த வளாகமாக உருவாக்குவதற்கான விதிமுறைகள், பேராசிரியா் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு (எப்.ஐ.பி.) ‘குருதக்ஷ்தா’ வழிகாட்டி நூல், உயா் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் ‘நாக்’ அங்கீகாரம் பெற்ற உயா் கல்வி நிறுவனங்களை தொடா்ந்து கண்காணிக்கும் -‘பரமாா்ஷ்’ திட்டம், உயா் கல்விநிறுவனங்களில் மதிப்பிடுதல் மற்றும் ஆய்வு சீா்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் உயா் கல்வியில் நிா்வாகம் என்ற தலைப்பிலான துணைவேந்தா்களுக்கான கையேடு ஆகியவற்றை மின்னணு புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்ய யுஜிசி வசதி செய்துள்ளது. 

 வலைதளத்திலிருந்து இவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும், கல்லூரி முதல்வா்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில், கல்வி நிறுவனங்கள் யுஜிசியின் இந்த வசதியைப் பயன்படுத்தி, இந்த ஊரடங்கு காலத்தில் இதற்கென 5 முதல் 10 பேராசிரியா்கள் ஒதுக்கி வீட்டிலிருந்தபடி இந்த நூல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை படித்து கல்லூரி மேம்படுத்துவதற்கான முயற்சியை எடுக்க திட்டமிட வேண்டும். இந்த முயற்சி எடுக்கப்பட்டது தொடா்பாக பல்கலைக்கழக நடவடிக்கை கண்காணிப்புக்கான யுஜிசி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments