100 சதவீத தேர்ச்சி வேண்டாமே? ஆசிரியர்களே உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்    

100 சதவீத தேர்ச்சி   

இந்த வார்த்தையைக் கேட்டதும், அதிர்ச்சியும் ஆச்சர்யமும் வரும். சில நேரங்களில் வருத்தமும், முகச்சுழிப்பும் வரும் ஏன்? கோபம் கூட வரலாம். ஏனென்றால் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிற திசை 100% தேர்ச்சி நோக்கித்தான். இதற்கு நேர் எதிராக எதிர்மறைக் கருத்தை அள்ளித் தெளிப்பது போலவும் அவலச் சொற்களை உதிர்ப்பது போலவும் தோன்றும். ஆனால் அதன் பயன் என்ன?

  சற்று யோசித்துப் பாருங்கள் இந்த நூறு சதவீதத் தேர்ச்சியில் எல்லோருடைய சுயநலமும் ஒட்டுமொத்தமாக ஒளிந்து இருக்கும். ஆசிரியரைப் பொறுத்த வரையில் தன்னுடைய பாடத்தில் அனைவரும் தேர்ச்சி அடைந்தால் அவர் நல்ல ஆசிரியர் அனைவரிடமும் பாராட்டுப் பெரும் ஆசிரியர். ஒரு நிறுவனத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டால் அது சிறந்த பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். விருப்பம்போல் கட்டணம் வசூல் பண்ணலாம். பெற்றோர்களுக்கு அந்தப் பள்ளியில் சேர்த்தால் போதும் எப்படியும் வெற்றி அடைந்து விடுவான் என்ற நிறைவு. மாணவர்களுக்குப் புகழ்பெற்ற பள்ளியில் படிக்கின்ற பெருமை, ஆக எப்படியோ எல்லோருடைய சுயநலமும் நிறைவு பெறுகிறது ஆனால் பொதுநலம்? சுயநலம் அதிகமாகிவிட்டாலே பொதுநலம் படுத்த படுக்கையாகிவிடும்.

   “அனைவருக்கும் கல்வி” அனைவரும் கல்வி கற்று விட்டால் எல்லோரும் அறிவுடையவர்களாக மாறிவிடுவார்கள். சமுதாயத்தைச் சரியான பாதையில் நடத்திச் செல்வார்கள். மானிடத்தை மகத்துவ மிக்கதாக மாற்றி விடுவார்கள், என்றுதானே எண்ணினோம்! நடப்பது என்ன? கற்றவர்கள் பெருகப் பெருகக் குற்றங்கள் பெருகிக் கொண்டே போகிறது. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கின்ற கல்விக் கூடங்கள் பெருகப் பெருக சமத்துவம் மலரும் என்று எதிர் பார்த்தோம். ஆனால் பாலியல் வன்முறைகள் தானே கொடிகட்டிப் பறக்கிறது. ஒருவர் ஒருவரைப் பார்க்காமல் பெற்றோர்களும் எளியோர்களும் பார்த்துத் திருமணம் முடித்த காலங்களில் காலம் முழுவதும் பிரியாமல் கணவன் மனைவி உறவு கெடாமல் வாழ்ந்த காலம் போய் படிக்கும் போதே பார்த்துப் பழகி காதலித்துத் திருமணம் செய்து முறையாய் வாழாமல் கருத்து வேறுபாட்டால் வாழ்வு கசந்து விவாகரத்திற்காக கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைகின்ற இளவல்கள் வாழ்க்கையில் விட்டுக் கொடுக்க மனமில்லாததுதானே! தியாகம் பொறுமை சகிப்புத் தன்மையை இன்றையக் கல்விமுறை தின்றுவிட்டதா? இல்லை மானிடத்தில் தீர்ந்து விட்டதா?

   அப்படியென்றால் எதனை எதிர்பார்த்து இந்தக் கல்வி, பயணம் போய்க்கொண்டிருக்கிறது? முடிந்ததைப் படித்து முயற்சி செய்து ஒருவேலை வாங்கி, வசதி வாய்ப்புகளைப் பெருக்கி நினைத்ததை அனுபவத்து வாழ்வதற்கும் வயிற்றுப் பிழைப்பிற்கும்தான் இந்தக் கல்வியா? இன்றையச் சமுதாயத்தைப் பார்த்தால் அப்படித்தானே தெரிகிறது.

   ஒருகாலத்தில் விருப்பமுள்ளவர்கள் படித்து முடியாதவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு முடிந்த வேலைகளைப் பார்த்து பொருளீட்டி, படித்தவர்களுக்கு மரியாதையளித்து பெரியோர்கள் பேச்சுக்குக் கட்டுப்பட்டு மானம் பெரிதென வாழ்ந்த வீரப்பரம்பரை தானே நாமே! எப்போது தடுமாறினோம்? எங்கே தடம்மாறினோம்? பிஞ்சுகள் கசக்கப்படுகின்றன காமத்திற்காக, பிரியமானார் கொல்லப்படுகிறார்கள் கள்ளக்காதலுக்காக, கலப்புத் திருமணம் கருவருக்கப்படுகிறது சாதிகளுக்காக, உடனிருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் பதவிக்காக, உடன் பிறந்தோர் பகைவர்களாகிறார்கள் கட்சிகளுக்காக, எத்தனை தாக்குதல்கள், எத்தனை குழிபறிப்புகள், இலஞ்சம் குறுக்கு வழி, கொலைப் பழி, மொட்டைக் கடிதம், பொய்யுறைத்தல் வதந்திகளைப் பரப்புதல் அனைத்தையும் வெளியில் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இத்தனையும் தந்ததா இந்தக் கல்விமுறை? இல்லை தடுக்க மறந்ததா?

   இதற்கு யார் காரணம்? அளவோடு பிள்ளை பெற்றால்; வளமோடு வாழும் என நினைத்து ஒன்று, இரண்டு பிள்ளைகளைப் பெற்று தன்னுடைய எல்லாக் கனவுகளையும் அவன்மீது சுமத்தி அவனை வார்த்தெடுக்கிறேன் என்ற பெயரில் வளைத்து ஒடிக்கிற பெற்றோர்கள் குற்றவாளிகளா? தன்னுடைய பாடத்தில் நூறு சதவீதத் தேர்ச்சியை பெற மதிப்பெண் எடுக்கிற இயந்திரமாக மாற்றி மாணவனை வடிக்கிறேன் வடிக்கிறேன் என்று சிதைக்கிற ஆசிரியர்கள் குற்றவாளிகளா? சுற்றியுள்ளவர்கள் எல்லாம் தனக்காக அல்லும் பகலும் அயராது துடித்துக் கொண்டு இருக்கும்போது எவ்விதப் பொறுப்போ, கவலையோ இன்றித் திரியும் இன்றைய மாணவர்கள் குற்றவாளிகளா? இவர்களை மையப்படுத்தி எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று காலத்தையும், கவர்ச்சியையும் கலந்துகொடுத்து காட்சிக் குருடர்களாய் மாற்றி காமத்தைக் கருத்தறிக்க வைக்கும் ஊடகங்கள் குற்றவாளிகளா? வீரமில்லா ஆண்மையையும் ஆடையில்லா மேனியையும் காட்சிக்குக்காட்டி இதுதான் இன்றையச் சினிமா என மானிடத்தைக் கேவலப்படுத்தும் திரைப்படம் குற்றவாளியா? பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, நேர்மையற்ற வாழ்க்கையைக் கடைபிடித்து பணத்தால் எதையும் செய்யலாம் எனத் தவறான பாதையினைக் காட்டுகின்ற அரசியல் குற்றவாளியா? வீதிதோறும் போதைப் பொருட்களைத் திறந்து வைத்து கதாநாயகர்கள் எல்லாம் திரையில் அதோடு ஆடிக்கொண்டு, தன்னைக் கதாநாயகனாகப் பாவிக்கும் இளவல்கள் மதுவால் தடுமாற வைக்கின்ற அரசாங்கம் குற்றவாளியா? மதத்தால் மதம் பிடித்து, மனித நேயத்தைச் சாகடித்து, மந்திரத்தால் மாங்காய் பழுக்கும் என்று மயக்கும் வார்த்தைகள் பேசி வரவே மாட்டார் என்று தெரிந்திருந்தும் கடவுள் இதோ வருகிறார் அதோ வருகிறார் என்று ஏமாற்று வித்தைகள் செய்யும் மதவாதிகள் குற்றவாளிகளா? இவர்களில் எவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இளைய சமுதாயத்தை எப்படிக் காப்பாற்றுவது? ஏமாற்று வித்தைக்காரர்கள் எல்லோரும் வெற்றியடைகிறார்கள் என் இளைய சமுதாயம் மட்டும் தோற்றுக் கொண்டே இருக்கிறது தேர்வில் வெற்றியடைகிறார்கள் முதல் மதிப்பெண் வாங்குகிறார்கள் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள் மதிப்பீடுகளில் வீழ்ந்து போகிறார்கள்.

   இவற்றிலிருந்து என் இளைய சமுதாயம் எழுந்திருக்க வேண்டுமென்றால் சுயமரியாதை, சுய சிந்தனை இவை இரண்டும் வேண்டும். இவையிரண்டையும் இன்றையக் கல்விமுறை கற்றுத் தரப் போவதில்லை. யாரோ ஒருவர் வடித்துக்கொடுக்கின்ற பாடத்திட்டத்தைப் பாதையாக எண்ணாமல் அதனையே வாழ்க்கையாகப் போதித்துக் கொண்டிருக்கின்ற கல்வி முறையில் இவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாக மாறுகிறார்கள். மாற்றப்படுகிறார்கள் அரசுக்கும் சமுகத்திற்கும் பொறுப்பானவர்களாய் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டு பாடத்திட்டத்தைப் படைத்த பிரம்மாவாக மனதில் வைத்து பதில் சொல்லுகிற மாணவனாக அன்றாடம் உருவாக்கிக் கொண்டிருக்கிற ஆசிரியச் சமூகம் என்று கேள்வி கேட்கிற மாணவனை உருவாக்க முன்னெடுக்கிறதோ அன்றுதான் மானிடத்தை வார்த்தெடுக்கமுடியும், கல்வியில் முன்னேறிய நாடுகள் எல்லாம் ஏழு வயதிற்குப் பிறகே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறது இங்கு என்ன கருமமோ தொட்டிலில் தூங்குகிற பிள்ளையைத் தூக்கி வந்து பள்ளியில் படிக்க வைக்கின்ற கொடுமைத்தனம் என்றுதான் அழியுமோ?

    இன்றைய இளைய தலைமுறைகளிடம் எத்தனையோ திறமைகள் புதைந்து கிடக்கிறது. சிற்பியாக, கலைஞனாக, ஓவியனாக, நடிகனாக, கவிஞனாக இருப்பவர்களையெல்லாம் ஒன்றாக ஒரு வகுப்பறையில் வைத்து ஒரே பாடத்திட்டத்தில் கேட்கின்ற கேள்விக்கு சிந்திக்காமல் கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுக்கும் நமது பாடத்திட்டம் மாறினால் தவிர மீட்பு இல்லை ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை, தனித்திறன் வாய்ந்தவன். அவனை அவன் திறனில் பயிற்றுவிக்கும் நிலை இல்லாது வயிற்றுக்கும், வசதிக்கும் ஆசைப்பட்டு சுயநிலை இழந்து இஷ்டப்பட்டு வேலை செய்யும் துறையை விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு செய்யும் வேலையில் விழுந்து வெந்து நொந்துபோகும் இளைய தலைமுறைக்கு விரும்பும் துறையில் வேலை கிடைக்கும் வரை வீழ்ச்சியே தவிர வெற்றியில்லை. அதனால் மதிப்பெண்ணை வைத்து மதிப்பீடு செய்வதை விட்டுவிட்டு அவனைச் சுயமாகச் சிந்திக்க விடுங்கள். அவன் விரும்பும் துறையை வகுப்பறையை விட்டு வெளியே தேடட்டும், அதற்கென அவனே பயிற்சி எடுக்கட்டும் அதில் பண்டிதனாகட்டும். எப்படியாவது அவனுக்கு இஷ்டம் இல்லாமல் கல்வியைத் திணித்து கட்டாயப்படுத்தி வெற்றி (Pass) அடைய வைத்து காலம் முழுவதும் அவனைக் கஷ்டப்படுத்தாதீர்கள். வெற்றியடைகிறவன் விருப்பப்பட்டு. அதாவது பெற்றோர் ஆசிரியர் கட்டாயத்திற்கு உட்படாமல் விரும்பி வெற்றி அடையட்டும். தொடர முடியாமல் இருப்பவன் தோல்வி அடையட்டும். இந்த தோல்வி தேர்வில்தான். வாழ்க்கையில் இல்லை, என்பதை கற்றுக்கொடுங்கள். அவனது தேவை எது? தேர்வு எது? தேடுதல் எது? என்பதைத் தெளிவாகத் தேர்ந்து தெளிந்து தேடிக் கண்டுபிடிக்கப் பாதை காட்டும். ஆசிரியராக இருங்கள் உங்கள் 100% வெற்றிக்காக அவனை உங்கள் தேவைக்கு உள்ளிழுக்காதீர்கள். உயிரோடு சமாதி வைக்காதீர்கள். உங்கள் வெற்றிக்காய் தினந்தோறும் அவனைக் காவு கொடுக்காதீர்கள். வெற்றியாளர்கள் அத்தனை பேரும் தங்கள் வெற்றியை கல்வியில் மட்டும் கண்டெடுத்தவர்கள் அல்ல உழைப்பிலும் தன்னம்பிக்கையிலும் தன்னை நிலைநிறுத்தியவர்கள் என்பதைக் கற்றுக்கொடுங்கள். கல்விக்கு மட்டுமே டியூசன் கற்றுக்கொடுப்பதை விட அவன் விரும்பும் துறையில் பயிற்சி கொடுக்க பெற்றோரிடம் கட்டாயப்படுத்துங்கள் இப்படிச் செய்தீர்கள் என்றால் அனிதா இறப்பு இருக்காது ஆசிரியர்கள் மீது பாலியல் வன்கொடுமை, மாணவர்களைத் தாக்குதல் புகார்கள் இருக்காது. டியூசன் என்ற பெயரிலும் கோச்சிங் என்ற பெயரிலும் பகல் கொள்ளை நடைபெறாது. வயது ஆன பின்பும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியோ! கல்யாணத்திற்கு தாமதமோ! தேவையற்ற வறுமையில் உழல்வதோ! இருக்காது. கல்வியைத் தாண்டி திறமையில் வாழ்க்கை உள்ளது என்று தெரிந்து கொள்வார்கள் அல்லவா! இப்போது சொல்லுங்கள் 100% தேர்ச்சி….

  “உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் ஒருவன் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் விளையும் பயன் என்ன?”

This entry was posted in நுழைவு வாயில் by admin. Bookmark the permalink



Post a Comment

0 Comments