தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வினாத்தாள் வழங்கும் முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து, தேர்வாணையம் ஆலோசனை நடத்தியுள்ளது.
தேர்ச்சி பெற்றனர்
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.'குரூப் - 4, குரூப் - 2 ஏ, குரூப் - 2, வி.ஏ.ஓ.,' உள்ளிட்ட தேர்வுகளில், இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக, ஏராளமானோர், முறைகேடாக தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, 40க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வு நாளில், தேர்வறையில் உள்ளோருக்கு வினாத்தாள் கிடைக்கும் முன், இடைத் தரகர்களுக்கு கசிந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த வினாத்தாளுக்கு, டி.என்.பி.எஸ்.சி.,யின் வினாத்தாள்தயாரிப்பு குழுவுடன் தொடர்புடைய சிலர், விடைக்குறிப்பைதேர்வு முடியும் முன் தயார் செய்துள்ளனர். அதனால் தான், தேர்வர்களின் விடைத்தாள்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு செல்லும் முன், அவற்றில் சரியான விடைகளை எழுதி, பலர் தேர்ச்சி பெற வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆலோசனை
எனவே, வருங்காலங்களில் வினாத்தாள் கசியாமல், அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம், டி.என்.பி.எஸ்.சி.,க்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வாணைய அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்திஉள்ளனர். வரும் காலங்களில், ஒவ்வொரு போட்டி தேர்விலும், வரிசை எண் மாற்றப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகை வினாத்தாள்களைமாற்றி, மாற்றி வழங்குவது.மேலும், வினாத்தாள் தயாரிப்பில் உள்ள ஆசிரியர்கள் பட்டியலை மாற்றி, புதிய ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடம், வினாத்தாள் தயாரிப்பு பணிகளை வழங்குவதுபோன்ற பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையத்துக்கு வாகனங்களில் வினாத்தாளை அனுப்புவதற்கு பதில், இணையதளம் வழியே வினாத்தாளை வழங்குவது, அவற்றை பெறுவதற்கு, ஆன்லைனில் ரகசிய குறியீட்டு எண் நிர்ணயிப்பது போன்ற புதிய நடவடிக்கைகள்குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments