ஜூன், ஜூலை மாதத்தில் பாதிப்பு உச்சத்தைத் தொடும் - முதல்வர்கள் கூட்டத்தில் என்ன பேசினார் பிரதமர்

    ஜூன், ஜூலை மாதத்தில் பாதிப்பு உச்சத்தைத் தொடும்..!’ -முதல்வர்கள் கூட்டத்தில் என்ன பேசினார் மோடி?. இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் வைரஸ் பரவலின் தாக்கம் குறையாததால் இதே ஊரடங்கு இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கும் விரைவில் முடியவுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்த நேற்று காலை அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

     குறைவான நேரம் காரணமாக, 9 மாநில முதல்வர்கள் மட்டுமே கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மற்ற முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக வழங்கினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர், நாம் சந்திக்க இருக்கும் பொருளாதார சிக்கல்கள் தொடர்பாகப் பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு எதிரான யுத்தத்துடன் நாம் நமது பொருளாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றவர், லாக் டெளன் உத்தரவு இந்தியாவில் சிறப்பாக முடிவுகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் நீடிக்கும் லாக் டெளனால் இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்கள் காக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

   கொரோனா வைரஸின் தாக்கம் என்பது இன்னும் சில மாதங்கள் நீடிக்கலாம், முகக் கவசங்கள் நமது வாழ்கையின் ஓர் அங்கமாகிப் போகலாம்” என்று தெரிவித்த மோடி, மாநிலங்கள், சிவப்பு மண்டலங்களை ஆரஞ்ச் மண்டலங்களாகவும். ஆரஞ்ச் மண்டலங்களை பச்சை மண்டலங்களாகவும் மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

   இந்தக் கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வருடன் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ் சிங் தியோவும் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்திக்கும்போது டி.எஸ் சிங், `பிரதமர், ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா எண்ணிக்கையில் உச்சம் தொட வாய்ப்புகள் இருக்கிறது என்றார். அதற்குத் தகுந்தபடி அனைத்தையும் நாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் அவர் கேட்டுக்கொண்டார்’ என்றார்.


Post a Comment

0 Comments