கல்லூரி திறக்கப்பட்ட உடனேயே தேர்வுகளை எழுதி முடித்துதான் அடுத்தாண்டு வகுப்புகள் தொடங்கும், அதே மாதத்தில் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்

      காலையில் ஒரு தேர்வு, மதியம் ஒரு தேர்வு என மாணவர்களை தயாராக இருக்கும் படி உயர் கல்வித்துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு அநேகமாக ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்ற செய்தி மாணவர்களை குதூகலத்தில் ஆழ்த்தியிருக்கலாம். ஆனால், நீண்ட விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு நீண்ட குதிரைபந்தயம் காத்திருக்கிறது. ஏனெனில் கல்லூரி திறக்கப்பட்ட உடனேயே தேர்வுகளை எழுதி முடித்துதான் அடுத்தாண்டு வகுப்புகள் தொடங்கும். ஒரு தேர்வுக்கும் மற்றொரு தேர்வுக்குமான இடைவெளியாக சில மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.


     அனைத்து விதமான கல்லூரிகளிலும் இந்தாண்டு நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த உயர் கல்வித் துறை, கூடவே, இடைவெளி இன்றி விரைவாக தேர்வை நடத்திடவும், தேவைப்படுமெனில் காலையில் ஒரு தேர்வும், பிற்பகலில் ஒரு தேர்வும் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

    வளாக நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், அவர்களது தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் டிக் டாக் நடிகர்களாகவும், உலக சினிமா ரசிகர்களாகவும் அவதாரம் எடுத்திருக்கும் கல்லூரி மாணவர்கள், மீண்டும் தங்களது பாடப்புத்தகங்களை தூசிதட்ட வேண்டியுள்ளது.


    கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதத்தில் பருவத் தேர்வுகள் நடைபெறும் எனவும், அதே மாதத்தில் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் எனவும் உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும். மேலும், அதே மாதத்திலேயே முடிவுகளை வெளியிட உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறந்த உடன் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments