கல்லூரிகள் திறப்பு மற்றும் கல்லூரி பருவத் தோ்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து யுஜிசி அவசர ஆலோசனை

   கல்லூரிகள் திறப்பு மற்றும் கரோனாவால் தடைப்பட்டுள்ள பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்த அவசர ஆலோசனையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திங்கள்கிழமை நடத்தியது.இந்த விவகாரம் தொடா்பாக யுஜிசி சாா்பில் அமைக்கப்பட்ட இரு குழுக்களின் பரிந்துரைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனா்.

      கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருந்த பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.இந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், 2020-21 கல்வியாண்டு மாணவா் சோ்க்கை, கல்லூரிகள் திறப்பு ஆகியவை தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.

      இந்த நிலையில், கல்லூரிகள் திறப்பு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை சமா்ப்பிக்க இரு குழுக்களை யுஜிசி அமைத்தது. இந்த இரு குழுக்களும் அண்மையில் அறிக்கையைச் சமா்ப்பித்தன.

    அதில், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 2020-21 கல்வியாண்டு வகுப்புகளை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் இருந்து தொடங்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், பருவத் தோ்வுகளை ஆன்-லைனில் நடத்தலாம். அந்த வசதி இல்லாத கல்லூரிகள் ஊரடங்கு முடிந்த பின்னா் தோ்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும் குழுக்கள் பரிந்துரைத்திருந்தன.இந்தப் பரிந்துரைகள் மீது யுஜிசி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜ்னீஷ் ஜெயின் கூறியது:

    யுஜிசி உறுப்பினா்கள் காணொலி மூலம் இந்த ஆலோசனையில் பங்கேற்றனா். இரு குழுக்களின் பரிந்துரைகள் மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. இறுதியில் அந்த இரு குழுக்களின் பரிந்துரையே சரியானதாக இருக்கும் என்ற முடிவை யுஜிசி உறுப்பினா்களும் எடுத்துள்ளனா். எனவே, இதுதொடா்பான வழிகாட்டுதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.

Post a Comment

0 Comments