மருத்துவ படிப்புகள் வியாபாரமயமாவதை தடுக்க, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.'எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை படிப்பு முடித்தவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்' என, மத்திய அரசு, 2010ல் அரசாணை வெளியிட்டது. 2013ல், இந்த தேர்வு கட்டாய மாக்கப்பட்டது, அந்த அரசாணையை எதிர்த்து, வேலுார் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரி மற்றும் சில சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்தன. இதனையடுத்து மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும், ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதையடுத்து, கடந்த, 2012ல், அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின போது, நீட் தேர்வு கட்டாயம் என்பதற்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில், 'நீட் தேர்வு, எங்களுடைய உரிமைகளை பறிக்கிறது. நிர்வாக ரீதியிலான சிக்கல்களும், ஏற்படுகின்றன. அதனால், நீட் தேர்வை, சிறுபான்மை நிறுவனங்களுக்கு கட்டாயமாக்க கூடாது' என, வாதிடப்பட்டன.
இருதரப்பு விசாரணைக்கு பின், இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், எம்.ஆர்.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:நீட் தேர்வு முறை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை. அதனால், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு, நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. மேலும், நாட்டு நலனை மேம்படுத்த, மருத்துவ கல்வி, தரமாக இருக்க வேண்டும். தரமான கல்வியில், எவ்வித சமரசத்துக்கும் இடம் இல்லை. மருத்துவ படிப்புகள் வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க, நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments