சிபிஎஸ்இ மற்றும் இதர பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12ம் வகுப்பு தேர்வு இன்னும் நடத்தாமல் இருப்பதால், உயர் கல்வியில் படிக்க இருப்பவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் ஒரு பொதுவான தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று யுஜிசி அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கால் சிபிஎஸ்இ உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகளின் கீழ் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தவில்லை. அதற்குள் அடுத்த கல்வி ஆண்டும் வர உள்ளது. இதுகுறித்து ஆராய பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் ஹரியானா மத்திய பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையில் 12 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தங்களின் பரிந்துரைகளை பல்கலைக் கழக மானியக் குழுவிடம் வழங்கியுள்ளனர்.
அந்த பரிந்துரையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்ட வரைவு ஆகியவற்றை உறுதி செய்வதுடன், ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வருகைப் பதிவேட்டில் ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்ட விடுமுறையும் அவர்கள் கல்லூரிக்கு வந்ததாக கருத்தில் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடத்தப்படும் தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கலாம், மதிப்பெண்களில் மாற்றம் செய்து தேர்வு நடத்தலாம். மேலும் ஆன்லைன் மூலமும் வாய்ப்புள்ள இடங்களில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடத்தலாம்.
வரும் கல்வியாண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுகளில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் செயல்படலாம். இறுதி ஆண்டு தவிர்த்து முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுதல், ஒரு மதிப்பெண்கள் முறையில் தேர்வுகளை நடத்தலாம். முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்களில் 50 மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டரின் அகமதிப்பீட்டின் அடிப்படையிலும், மீதம் உள்ள 50 மதிப்பெண்கள் முந்தைய செமஸ்டர் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் வழங்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலையில் நடத்தி முடித்து ஆகஸ்ட்டில் வகுப்புகள் தொடங்கலாம். நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு சில மாநிலங்களில் நடத்தப்படாமல் உள்ளது.எனவே வரும் கல்வி ஆண்டில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தேசிய மற்றும் மாநில அளவில் ஒரு பொதுவான தேர்வை நடத்தி சேர்க்கை நடத்தலாம். இவ்வாறு குஹத் தலைமையிலனா குழு யுஜிசிக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
0 Comments