கொரோனா பரிசோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் அனைவருக்குமே மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்கள் ஆகியோருக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள கொரோனா பரிசோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகள் பின்வருமாறு...
தமிழகத்திற்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்கள்...
- ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தால் உடனடியாக குறிப்பிட்ட நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும்.
- ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்பவர்களுக்கான வழிமுறைகள்..
- வேறு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தால், குறிப்பிட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.
- ஒரு வேளை கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து, ஆனால் அந்த நபர் டெல்லி, மகாராஷ்த்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வந்திருந்தால் அவரை 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
- 7 நாட்களுக்கு பிறகும் அந்த நபருக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றால், அந்த நபர் வீட்டிற்கு சென்று 7நாட்கள் தங்களே தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
- ஒரு வேளை அந்த நபருக்கு வீடு இல்லையென்றால், அரசால் அமைக்கப்பட்ட முகாம்களில் எஞ்சியுள்ள 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஒரு வேளை கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து, ஆனால் அந்த நபர் டெல்லி, மகாராஷ்த்திரா, குஜராத் அல்லாத வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தால், வீட்டிலோ அல்லது அரசால் அமைக்கப்பட்ட முகாம்களிலோ 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான வழிமுறைகள்..
- வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தால் உடனடியாக குறிப்பிட்ட நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.
- ஒரு வேளை கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால் அந்த நபரை அரசால் அமைக்கப்பட்ட முகாம்கள் அல்லது ஹோட்டல்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போதும் அவருக்கு சோதனையில் நெகடிவ் என வந்தால், அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
விலக்கு அளிக்கப்பட உள்ள நபர்கள்..
- நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோருக்கு மேற்கூறிய வழிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
- குடும்ப உறுப்பினர்களின் மறைவிற்கு செல்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும் விலக்கு அளிக்கப்படும்.
- 75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மற்றவர்களின் உதவியை நாடும் முதியவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும்.
இதனிடையே எவரேனும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக வழிமுறைகளில் இருந்து விலக்கு கோரினால், அவர்களுக்கு மருத்துவ குழு மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் தொடர்பாக வழிமுறைகளில் இருந்து விலக்கு பெறுவோர் தங்களது விவரங்களை கட்டாயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments