சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில், நிலைமையை பொறுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வு வழங்கலாம் என தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், சென்னையில், சில நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், முதல்வர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நிபுணர்கள் குழுவினர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்தனர். இந்த 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும், பிற மாவட்டங்களில் நிலைமையை பொறுத்து, கூடுதல் தளர்வு அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்தில், கொரோனா இறப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பதாகவும், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
0 Comments