கல்லுாரி தேர்வுகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து கமிட்டி அமைக்க உத்தரவு

    'கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல், கல்லுாரி தேர்வுகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, தனியாக கமிட்டி அமைக்க வேண்டும்' என, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை, சில கட்டுப்பாடுகளுடன் திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல, அனைத்து வகை பள்ளி, கல்லுாரி தேர்வுகளையும் நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

     ஜூலையில், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதன்பின், நுழைவு தேர்வுகள் நடக்கின்றன.கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, செமஸ்டர் தேர்வுகள், ஜூலையில் நடத்தப்பட வேண்டும் என, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, அனைத்து பல்கலைகளுக்கும்,யு.ஜி.சி., சார்பில் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை:அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில்,செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் தேர்வு பணியில் உள்ளவர்களின் பாதுகாப்பில் கவனமுடன் இருக்க வேண்டும்.

       இதற்காக, கல்லுாரியிலும், பல்கலையிலும் தனியாக கமிட்டி அமைத்து, திட்டம் வகுக்க வேண்டும். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, தேர்வு குறைதீர் மையம் தனியாக செயல்பட வேண்டும். தொற்று பாதிக்காத வகையிலான, வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments