கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நிராகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தாமதமாகியுள்ள பல்கலை, கல்லுாரி தேர்வுகள், புதிய மாணவர் சேர்க்கை குறித்து ஆராய, ஹரியானா மத்திய பல்கலையின் துணைவேந்தர், குகாத் தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது.இந்த குழுவினர், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, யு.ஜி.சி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து, புதிய கல்வி ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை, யு.ஜி.சி., நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு நுழைவு தேர்வு நடத்தி, இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது.இந்த பரிந்துரையை நிராகரித்த, யு.ஜி.சி., 'முந்தைய ஆண்டுகளை போல், இளநிலை பட்ட படிப்பில் மாணவர்களை சேர்க்கலாம்' என, அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்த பரிந்துரையை, இதுவரை செயல்படுத்த முடியவில்லை.
0 Comments