பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிதான்: தேர்வுத்துறை அறிவிப்பு

     பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது இந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1 தேர்வில் சில பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அவை ஜூன் மாதம் நடத்தப்போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதாலும், நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது. அத்துடன், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண்கள், வருகைப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படும். அதற்கு பிறகு தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.


        இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் படித்து தேர்வுக்கு பதிவு செய்திருந்த மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள்களை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், அந்த விடைத்தாள்களை கொண்டு மாவட்ட வாரியாக முகாம்கள் அமைத்து, தேர்ச்சி மதிப்பெண்கள் போடவும் தேர்வுத்துறை முடிவு செய்திருந்தது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.


    இந்நிலையில், விடைத்தாள்கள் காணாமல் போய்விட்டதாகவும், கரையான் அரித்துவிட்டதாகவும் பெரும்பாலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம்போல காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை தருவார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே, சில பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகளையும் நடத்தினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதவிர, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கக் கூடாது என்று சில ஆசிரியர் சங்கங்களும் முறையிட்டன. இந்நிலையில்தான், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும், அவர்கள் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


      இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடப் பிரிவு, வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், தொழிற்கல்வி, கணக்குப் பதிவியல் ஆகியவற்றுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டன. இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர். மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி மாணவர்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர். இதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments