தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வசதிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ள 10ம் பொதுத்தேர்வுகளுக்கு, அனைத்து பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், வரும் 6ம் தேதி பள்ளிகளை ஆய்வு செய்யுமாறு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிகளில் உள்ள கட்டடங்கள், தேர்வறைகள், மேசைகள் மற்றும் இருக்கைகள் சரியாக இருக்கிறதா என்றும், கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கு செல்லும் போது ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் பள்ளிகளில் இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வட்டார அளவில் இரண்டு சிறப்புத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதால், நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்து, இட வசதி கொண்ட பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்கவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா காலத்தில் மன உளைச்சலில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
0 Comments