எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு ஆகஸ்டு மாதம் வெளியாகும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி

      கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

   கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (அதாவது நேற்று) அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 7 லட்சத்து 91 ஆயிரத்து 102 மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இதில் 7 லட்சத்து 90 ஆயிரத்து 681 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மொத்தம் 97.93 சதவீதம் மாணவர்கள் தேர்வுக்கு ஆஜராயினர்.

    கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த 2,942 மாணவர்கள் தேர்வு எழுதினர். கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 491 பேர் தனி அறையில் தேர்வு எழுதினர். முறைகேட்டில் ஈடுபட்ட 3 மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தார்வாரில் 2 பேர் மற்றும் ராய்ச்சூரில் ஒருவர் உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 645 மாணவர்கள் கர்நாடகம் வந்து தேர்வு எழுதியிருக்க வேண்டும். அதில் 592 பேர் தான் தேர்வு எழுதினர்.

      கொரோனா பாதிப்பு, வீட்டு தனிமை உள்ளிட்ட காரணங்களால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு துணைத்தேர்வின்போது தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தேர்வு சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

     மொத்தத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் இந்த அறிவியல் தேர்வு வெற்றிகரமாக நடந்தது. தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சிறப்பான முறையில் தங்களின் பணியை ஆற்றியுள்ளனர். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும். மாணவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

     பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு முடிவு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு ஆகஸ்டு முதல் வாரத்தில் வெளியாகும். நடப்பு ஆண்டில் கல்வி கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 1,150 பள்ளிகள் கல்வி கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதில் 450 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மனிதநேய அடிப்படையில் கல்வி கட்டணத்தை உயர்த்தக்கூடாது. நாங்கள் ஒரு உதவி மையத்தை அமைத்துள்ளோம். இது தொடர்பாக வரும் புகார்களை நிர்வகிக்க ஒரு அதிகாரியை நியமித்துள்ளோம். மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க அனுமதி இல்லை.

    பள்ளி நிர்வாகங்கள், வாரத்திற்கு 2 முறை பெற்றோரை சந்தித்து, குழந்தைகளின் கல்வி நிலை குறித்து ஆலோசிக்கலாம். மழலையர் பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 5-ந் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். கொரோனா பரவி வரும் நிலையில் பெரும்பாலான பெற்றோர், தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பவில்லை.

     பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துகளை அரசு கேட்டறிந்து வருகிறது. அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல் குறித்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டுதலை கர்நாடக அரசு பின்பற்றும். நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கை வழங்கியதும், பள்ளிகளை திறப்பது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்படும். இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

Post a Comment

0 Comments