இனி அரசு ஊழியர்களுக்கு இரண்டு வித பணி நேரம்
மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு விதமான பணி நேரங்கள் அறிமுகம் செய்யபடுவதாக, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று மாநில தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:மாநிலத்தில் இனி அரசு ஊழியர்கள் இரண்டு விதமான ஷிப்டுகளில் பணியாற்றுவார்கள். காலை 09.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை ஒரு ஷிப்டும், நண்பகல் 12.00 மணி முதல் மாலை 05.50 மணி வரை மற்றொரு ஷிப்டும் செயல்படும். முன்னதாக ஊழியர்களின் பணி நேரமானது காலை 10.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை என்பதாக இருந்தது.
ஆனால் அரசு ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை கணக்கில் கொண்டு, தற்போது இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற சில மாநிலங்களைப் போல் இல்லாமல் மேற்கு வங்கத்தில் இந்த கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியமானது எந்த வித பிடித்தமும் இல்லாமல் தரப்படுகிறது.அதேபோல் அரசு ஊழியர்கள் தவிர்க்க இயலாத காரணத்தால், ஒரு மணி நேரம் வரை பணிக்குத் தாமதமாக வந்தாலும் அவர்களுக்கு ஊழியத்தில் தாமததிற்கான அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
மாநிலம் முழுவதும் பள்ளிகளைப் பொறுத்தவரை ஜூலை மாதம் முழுவதும் அவை மூடப்பட்டிருக்கும். ஆனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். அதே நேரம் பள்ளிக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி சிந்திக்க வேண்டாம் என்று பள்ளி நிர்வாகங்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments