தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக, புகார்கள் எழுந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழக பிரிவு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிப்புடைய ஒருவரிடம் மருத்துவர் ஆலோசனை கட்டணத்தை தவிர்த்து நாள் ஒன்றுக்கு 23,182 ரூபாய் கட்டணம் வசூல் செய்யலாம் எனவும் மருந்து, படுக்கை கட்டணம், அறை வாடகை என அனைத்தும் சேர்த்து 10 நாட்களுக்கு 2, 31,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களிடம் நாள் ஒன்றுக்கு 43, 141 ரூபாயும், 17 நாட்களுக்கு 4,31,000 ரூபாயும் வசூல் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக நாள் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம் எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.எனினும், பரிந்துரைக்கப்பட்ட கட்டணமும் மிக அதிகமாக இருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு மூலம் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:
1. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைக்களுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக்கோரும்மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் இரத்து செய்யப்படும்.
4. மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு - 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
0 Comments