தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

    ஊரடங்கால் மூடப்பட்ட தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பெரும் அல்லல்படும் நிலைமை உருவாகி உள்ளது. எனவே, அவர்களின் நலனை காக்கும் வகையில், பள்ளிகளின் தன்மைக்கேற்ப, கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வசூலிக்கும் திட்டத்தை, அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், நாடு முழுவதும் உள்ள, பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படா விட்டாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது.தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு, 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க வேண்டிய அவசியம், பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், போதிய வருவாய் மற்றும் நிதி கையிருப்பு இல்லாததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.இதை கருத்தில் கொண்டு, மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதற்கு, அரசு அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் கோரிக்கைவிடுத்து உள்ளன.ஆனால், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, பள்ளிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதால், கட்டணம் வசூலிக்க முடியவில்லை.அதனால், ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.தற்போது, பெரிய நிறுவனங்களே, பொருளாதார நெருக்கடியால், ஊழியர்களுக்கு, 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துள்ளன.அப்படி இருக்கும் போது, கட்டணம் வசூலிக்காமல் எப்படி, தனியார் பள்ளிகளால் சம்பளம் வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களிடம், குறிப்பிட்ட சதவீத அளவுக்கு கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கைஎழுந்துள்ளது.


   'விருப்பம் உள்ள பெற்றோர், கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். மற்றவர்களை கட்டாயப்படுத்தி, எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ, போன் வழியாகவோ, நேரில் பணியாளர்களை அனுப்பியோ வற்புறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், இந்த தடையை நீக்கலாம்' என, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை அரசு கவனிப்பது போல, தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனையும், அரசு கவனித்து கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

    'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம், 60 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.'இந்த தொகையை, அரசு உடனே வழங்கினால், மாணவர்களிடம் கட்டணம் பெறாமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வசதியாக இருக்கும்' என்றும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கல்வி கட்டணத்தை ஆறு மாதம் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் தாக்கல் செய்து உள்ள மனு:


     கொரோனா பேரிடர் காலத்தில், மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.ஆனால், சில பள்ளிகள் கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்துகின்றன.அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆறு மாதங்களுக்கு, கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.


      இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையின் போது, தமிழக அரசு உரிய முடிவு எடுத்து, பெற்றோர், மாணவர் நலன் மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, உரிய பதில் அளிக்க வேண்டும்.ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, கட்டணம் வசூலிக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments