மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் அவகாசம் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன் லைன் வகுப்புக்கள் நடத்துவதை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல, ஆன் லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வக்கீல் விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புக்களை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கருத்துக்களைப் பெற்று தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.அதேபோல, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் சி.முனுசாமி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
0 Comments