10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கலில் தொடரும் குழப்பம்

     10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதா வேண்டாமா என்கிற விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி  பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



  மாணவர்களுக்கான மதிப்பெண் அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுமென அறிவித்தார். அதைத்தொடர்ந்து மாணவர்களின் காலாண்டு அரையாண்டு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் விவரங்களை தனித்தனியாக அனுப்ப வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டது. இதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தது குறிப்பாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் கணக்கிடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.



    இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதா அல்லது கிரேட் அடிப்படையில் தேர்ச்சி வழங்குவதா  என்பது குறித்து பலமுறை ஆலோசனைகள் நடத்தியது. ஆனாலும் எவ்வித முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அனைவருக்கும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தாலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு "ஏ" கிரேட் என்றும் தேர்வை எழுதாத மாணவர்கள்,தோல்வி அடைந்தவர்களுக்கு "பி", "சி" என்றும் கிரேட் அடிப்படையில் தேர்ச்சி வழங்குவதே சரியானதாக இருக்கும் என கல்வியாளர்களும் ஆசிரியர்களும் கருத்தை முன்வைக்கின்றனர்.



    தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பதில் தொடர்ந்து நீடித்து வரும் குழப்பம் காரணமாக மாணவர் சேர்க்கையில் பல சிக்கல்கள் எழக்கூடும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக மாணவர் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்..

Post a Comment

0 Comments