பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வி அடைந்த மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் விடைத்தாள் மறுகூட்டல் செய்து கொள்ள 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்கள் 25ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் கடந்த 16ம் தேதிவெளியிடப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல் கோரியோ, அல்லது மதிப்பெண் மறு கூட்டல் கோரியோ விண்ணப்பிக்க விரும்பினால் நாளை (24ம் தேதி) முதல் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்தும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறு கூட்டல் செய்ய விரும்புவோருக்கு அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்போது எந்தெந்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல்கள் தேவை, எந்தெந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய வேண்டும், என்று மாணவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு, பாடம் ஒன்வொன்றுக்கும் தலா ரூ.275, செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்புவோர் உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, மற்ற பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் கேட்போர் அந்த பாடங்களுக்கு தற்போது மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகே மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் தேவையில்லை என்றால் மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். இதற்கு பிறகு விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்வது, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதையடுத்து, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 25ம் தேதிமுதல் 30ம் தேதிவரை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு அந்தந்த தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தங்கள் கையொப்பம் போட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
0 Comments