தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரை என்னென்ன ரத்து செய்யப்பட்டுள்ளது

     சிறப்பாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தமிழக அரசு மதிப்பூதியம் வழங்கி வருகிறது. கொரோனாவை எதிர்கொண்டு நிதி நெருக்கடியில் இருப்பதால், மதிப்பூதியத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அகவிலைப்படி மற்றும் விடுப்பு ஊதியத்தை தமிழக அரசு ரத்து செய்து இருந்தது. 

    தமிழக அரசில் சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. ஊழியர்களை ஊக்குவிக்க இந்த மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அகவிலைப்படி, மதிப்பூதியம்: இதற்கு முன்னதாக தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நிறுத்தி வைப்பதாக அரசாணை வெளியிட்டு இருந்தது. அகவிலைப்படி உயர்வு நிறுத்தத்தால் தமிழக அரசுக்கு ரூ. 4,900 கோடி சேமிக்க முடியும். மேலும், 2020ல் ஜனவரி முதல் 2021ல் ஜூன் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

    இதற்கு முன்னதாக எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. மேலும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால், சிக்கன நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்படும் என்று ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். அகவிலைப்படி ரத்தால் இந்த நிதி ஆண்டிலும், 2021-2022-ம் நிதி ஆண்டிலும் மத்திய அரசு ரூ.37 ஆயிரத்து 530 கோடியை சேமிக்க முடியும்.

Post a Comment

0 Comments