புதுடெல்லி: ‘‘வரும் 2022ம் ஆண்டில் இருந்து புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள கல்வி திட்டத்தில் மாணவர்கள் படிப்பார்கள்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மத்திய கல்வித் துறை அமைச்சகம் ‘புதிய கல்விக் கொள்கை 2020’ பற்றிய கருத்தரங்கை தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபத்தில் மாநில ஆளுநர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘21ம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி’ என்ற தலைப்பில், காணொலி மூலமாக கலந்துரையாடல் நடந்தது. இதில், பிரதமர் மோடி. பேசியதாவது:கடந்த 30 ஆண்டுகளில் எல்லாம் மாறி விட்டது. ஆனால், காலத்துக்கேற்றார்போல் கல்விமுறை மட்டும் மாறவில்லை. அதற்காவே, ‘புதிய கல்விக் கொள்கை -2020’ கொண்டு வரப்பட்டுள்ளது. இது, 21ம் நூற்றாண்டின் புதிய சகாப்தமாக இந்தியாவை மாற்றுவதற்கான விதை.
இதன் மூலம், இந்தியை மத்திய அரசு திணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எந்த மொழியையும் யாரும் கற்கலாம். அதற்கான வாய்ப்பையே புதிய கல்விக்கொள்கை வழங்குகிறது. தங்களின் எதிர்காலத்துக்குத் தேவையான மொழியைக் கற்கும் சுதந்திரம் மாணவர்களுக்கு உண்டு. இளைய தலைமுறையினர், நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். ஆனால், அவர்களுக்கு மன அழுத்தம் தரும் விஷயமாகக் கல்வி மாறிவிட்டது. புதிய கல்விக்கொள்கை இந்த அழுத்தங்களில் இருந்து அவர்களுக்கு விடுதலை அளிக்கும். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022-ம் ஆண்டில், எல்லா மாணவர்களும் புதிய கல்விக்கொள்கையின்படி வரையறுக்கப்பட்ட கல்வியைப் பயில்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மோடி மேலும் பேசுகையில், ‘‘மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்க் ஷீட் (மதிப்பெண் அட்டை), அவர்களுக்கு மன அழுத்தத்தை தரும் ‘பிரஷர் ஷீட்’டாகவும், பெற்றோருக்கு கவுரவத்தை அளிக்கும் ‘பிரஸ்டிஜ் ஷீட்’டாகவும் மாறிவிட்டது. பெற்றோர், மாணவர் இருதரப்புக்கும் ஏற்படும் இந்த அழுத்தங்களை போக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது,’’ என்றார்.
0 Comments