பள்ளி மாணவருக்கு கொரோனா: கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. ஏற்கனவே பல மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தமிழகத்திலும் அதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
சேலம் மாவட்ட பெத்தநாயக்கன்பாளையம் அருகில் உள்ள தும்பல் எனும் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே அந்த மாணவருக்கு சளி, காய்ச்சல் இருந்த காரணத்தால் அவர் பரிசோதனை மாதிரியை மருத்துவமனையில் சமர்ப்பித்து விட்டு பள்ளிக்கு வந்துள்ளார். தற்போது அதற்கான முடிவுகள் வெளியான நிலையில், அந்த மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்களையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று உறுதியானதால் அந்த பள்ளி 10 நாளைக்கு மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments